மலையக மக்கள்: வரலாறு - வாழ்வியல் - போராட்டம் - இரண்டு நூற்றாண்டுகளை கடந்து….
லூல்கந்துர தோட்டம், கண்டி, இலங்கை
மலையக மக்கள் இலங்கையின் பொருளாதார, சமூக அபிவிருத்தியின் முதுகெழும்பாக காணப்படுகின்றனர். இலங்கைக்கு தென் இந்தியாவிலிருந்து இம்மக்கள் தொழிலாளர்களாக கொண்டு வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவுபெற்றமையை ஞாபகமூட்டும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இம்மக்களின் வரலாற்றையும், வாழ்வியலையும், சவால்களையும், ஞாபகப்படுத்தும் அதேவேளை, எதிர்வரும் நூற்றாண்டை எவ்வாறு முகங்கொடுக்கவேண்டும், சவால்களை எதிர்கொண்டு மனித உரிமைகளை எவ்வாறு நிலைநிறுத்தவேண்டும் என்ற சவாலை நோக்கி, ஒரு சமூகமாக, சமத்துவ பிரஜைகளாக, தனித்துவத்துடன் முன்னோக்கி செல்லும் வழிமுறைகள் பற்றிய மலையக மக்கள் பிரகடனம் 26 ஆகஸ்ட், 2023ஆம் திகதி இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தேயிலை தோட்டமான கண்டி லூல்கந்துர தோட்டத்தில் ஜேம்ஸ் டெயிலர் சிலை முன்பாக வெளியிடப்பட்டது.
இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தேயிலை தோட்டமான, கண்டி மாவட்ட, தெல்தோட்டை, லூல்கந்தூர தோட்டத்தில், தோட்டத்தை உருவாக்கிய ஜேம்ஸ் டெயிலர் வாழ்ந்த அந்த தோட்டத்தில், மலையக தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் , பெண்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில்சார் நிபுணர்கள் இணைந்து, மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டிலும், தொழிலாளர் ஒத்துழைப்பு முன்னனி, பெண்கள் ஒத்துழைப்பு முன்னனி, மலையக மகளிர் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மலையக 200 வருட வரலாற்று பிரகடன கூட்டத்தை ஏற்பர்டு செய்தமை குறிப்பிடத்தது.
மலையக சமூகம் அதன் தனித்துவ அடையாளத்தை பேணிக்கொள்வதில், மனித கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியை, உரிமைகளை, அமைதியை பேணிக் கொள்வதில் வரலாற்று ரீதியான கடமையை கொண்டுள்ளது என்ற யதார்த்ததை கவனத்திற் கொண்டு,
2023 ஓகஸ்ட் 26ஆம் திகதி கண்டி மாவட்ட லூல்கந்தூர தோட்டத்தில் மாபெரும் கூட்டமும் பிரகடனம் வெளியிடும் இடம்பெற்றது.
மேற்படி கூட்ட மற்றும் மலையக கவை, கலாசார நிகழ்வுகள் ஜேம்ஸ் டெயிலர் வாழ்ந்த வீடான தற்போதைய லூல்கந்துர ஆதவன் தமிழ் பாடசாலை வளவில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களின் பங்குபற்றலுடன், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செவ்வி காணல்
மலையக மக்கள் 200 ஆண்டுகள் நவீன அடிமைத்தனத்தை நோக்கி............
மலையக மக்கள் பல்வேறு பெயர்களிள் அடையாளம் காணப்படுகின்றனர். பெருந்தோட்ட மக்கள், இந்திய வம்சாவளி தமிழர் என்றேல்லாம் அழைக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 200 வருட வரலாற்றை பதிவு செய்கின்ற இந்த மக்கள் பற்றிய கருத்தாடல் மிக குறைந்த மட்டத்திலேயே இடம்பெற்றுள்;ளமையை குறிப்பிடத்தக்கது. மலையக மக்களின் 200 வருட வரலாறு குறித்த ஞாபகார்த்த நினைவு குறித்து அண்மையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றி கூறுவதுடன், இச்சமூகத்தின் அபிவிருத்தி, மனித உரிமை குறித்த காத்திரமான கருத்து பகிர்வு அவசியமாக இருக்கின்றது. இந்த பின்னணியில் மலையக மக்கள் குறித்த மனித உரிமை, அபிவிருத்தி, சமூக மாற்றம் குறித்து தேசிய, சர்வதேச ரீதியாக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுப்பட்டுவரும் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகருமான கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் வழங்கிய செவ்வி தினகரன் பத்திரிக்கையில் இடம்பெறுகின்றது.